Tuesday 7 August 2012

நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு


புதுடில்லி : நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கை 252 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் ஹமீது அன்சாரியே நிறுத்தப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டார். பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை தேர்தலை புறக்கணித்தன.

ஓட்டுபதிவு துவங்கியது: பார்லிமென்ட்டில் லோக்சபா மற்றும் ராஜ்சபா ஆகிய இரு அவைகளிலும் உள்ள மொத்தம் 790 எம்.பி.க்கள் ஒட்டளிக்க தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும் ஓட்டளிக்க ராஜ்யசபாவில் உள்ள அறை எண் 63-ல் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் ஒட்டளித்தனர். தொடர்ந்து மற்ற எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது. இத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் நியமித்தார்.

யார் யாருக்கு யார் ஆதரவு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளான தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் ஜஸ்வந்த் சிங்கை பொறுத்தமட்டில் பா.ஜ.வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், அதிமுக., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர்.

அன்சாரி வெற்றி: மாலை 7 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதன்படி, அன்சாரிக்கு 490 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 ஓட்டுகளும் கிடைத்தன. 8 ஓட்டுகள் செல்லதா ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, 252 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஹமீது அன்சாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More