Thursday 6 September 2012

மொபைல்போன்' வழங்கும் திட்டம் : மத்திய அரசு மீது சவுதாலா சாடல்

ரோடாக்: ""வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மொபைல்போன் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதன் மூலம், மற்றொரு "மெகா' ஊழலுக்கு தயாராகி வருகிறது,'' என, அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா தெரிவித்துள்ளார்.அரியானா மாநிலம், லடயானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சவுதாலா பேசியதாவது:நம் நாட்டில், இரண்டு வேளை சாப்பாட்டிற்காக, ஏழை மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், அவர்களுக்கு "மொபைல்போன்' வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஏழை மக்களை ஏளனப்படுத்தும் செயல்.ஏழை மக்களுக்கு <உணவு கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதற்குத் தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மாறாக, "மொபைல்போன்' போன்ற ஆடம்பரப் பொருட்களை அவர்களுக்கு வழங்குவதால், எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது. அப்படி, இலவசமாக போன் வழங்கினாலும், அவர்களிடமிருந்து, "ரீ சார்ஜ்' என்ற பெயரில், மொபைல்போன் நிறுவனங்கள் கட்டணம் வசூலித்துவிடும். இதன்மூலம், மிகப் பெரிய ஊழலுக்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது தெளிவாகிறது.இவ்வாறு சவுதாலா பேசினார்.இதற்கிடையில், சவுதாலா மீதான ஊழல் வழக்கை நடத்துவதற்கு, சி.பி.ஐ., பரிந்துரை செய்துள்ளதாக, நேற்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. கடந்த 2003-04ம் ஆண்டு, அரியானாவில், சவுதாலா முதல்வராக இருந்த போது, மாநில அரசு அதிகாரிகளில் இருந்து, ஐ.ஏ.எஸ்., பணிக்குத் தேர்வு செய்வதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., சவுதாலா மீது வழக்கை பதிவு செய்ய பரிந்துரை செய்தது.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/

இலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி


புதுடில்லி: "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராஜ்யசபாவில், மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார்.

தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். ஆனால், அதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று ராஜ்யசபாவில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு, மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அளித்த பதிலில், "இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த இரு வீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இலங்கை உட்பட நமது அண்டை நாடுகளின் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி பரிமாறப்படுவது வழக்கமான ஒன்று தான்' என்று குறிப்பிட்டு இருந்தார். இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த, 450க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், "தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது' என, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் கைகலப்பு


அரசுப் பணியில் உள்ள, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை, நேற்று, ராஜ்ய சபாவில் கடும் அமளிக்கு இடையே, மத்திய அரசு தாக்கல் செய்தது. எம்.பி.,க்களின் கைகலப்பு மற்றும் பெரும் ரகளை காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
அரசு பணியில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க, சட்டத் திருத்த மசோதா கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில், சமாஜ்வாதி கட்சியைத் தவிர, பிற கட்சிகள் அனைத்துமே ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து, இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, பார்லிமென்டில் நேற்று, மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நிலக்கரி சுரங்க முறைகேடு ஊழல்கள் காரணமாக, 10 நாட்களாக பார்லிமென்ட் முடங்கியது. இருப்பினும், எந்த சூழ்நிலையிலும், மசோதாவை ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்து, அரசு தயாராக இருந்தது.

அமளி துவக்கம்:

நேற்று காலை, ராஜ்யசபா துவங்கியதும், அவைத் தலைவர், ஹமீத் அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணனை நினைவு கூர்ந்து, ஆசிரியர் தினச் செய்தியை வாசித்து முடித்தார். தொடர்ந்து, "கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்' என அறிவித்தபோது, சபையில் அமளி ஏற்பட்டது; இதையடுத்து சபை, உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12:00 மணிக்கு மீண்டும் கூடியபோது, தலைவர் நாற்காலியில், குரியன் அமர்ந்திருந்தார். பதவி உயர்வில், இட ஒதுக்கீடு தரும் மசோதாவை அறிமுகப்படுத்தும்படி, குரியன் கேட்டுக் கொண்டார். உடனே, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி எழுந்து, மசோதாவை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, பேச ஆரம்பித்தார். அப்போது, சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிடக் கிளம்பினர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வாலுக்கும், பகுஜன் சமாஜ் எம்.பி., அவதார் சிங்கிற்கும், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும், ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர்.

இதைப் பார்த்து, பிற எம்.பி.,க்கள், அவர்களை விலக்கி விட்டனர். ஐந்து நிமிடங்கள் நடைபெற்ற, இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால், சபையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் நடந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கும், சபையில் இருந்தார். நிலைமை முற்றுவதை உணர்ந்த குரியன், சபையை, மதியம், 2:00 மணிக்கு ஒத்தி வைத்தார். சபை கூடியதும், மீண்டும் ரகளை ஆரம்பமானது. இதையடுத்து, சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவில்...:

லோக்சபாவிலும் நேற்று கடும் அமளி காணப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க.,-எம்.பி.,க்கள் வழக்கம் போல, இலங்கை ராணுவத்தினருக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து கோஷங்கள் போட்டனர். ராஜபக்ஷே வருகையை எதிர்த்து, திருமாவளவன் கோஷங்கள் போட்டபடி இருந்தார். கேள்வி நேரத்தின்போது, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், கேள்வி நேரம் முடிந்ததும், அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமாவளவன் தன் முற்றுகையை தொடர்ந்தவுடன், வேறு வழியின்றி, தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுந்து வந்து, மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். இவ்வாறு, தொடர்ந்து அமளி இருந்து கொண்டிருந்ததால், இரண்டு சபைகளுமே, மதியத்திற்கு மேல், முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டன.

மாயாவதி அதிருப்தி:

நிலக்கரி ஊழல் விவகாரம், பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால், அதை முறியடிக்கும் விதமாக, மத்திய அரசு இந்த மசோதாவைக் கையில் எடுத்துள்ளது. தாங்கள் நிறைவேற்ற முன்வந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என, பிரசாரம் செய்வதற்காக, ஆளுங்கட்சி இவ்வாறு நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கே சாதகமாகும் வகையில், வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர் தான், இந்த மசோதாவை கொண்டு வருவதில், உறுதியாக இருந்து வந்துள்ளார். காங்கிரசிடம் நெருக்கடி கொடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றும் படியும் கேட்டுக் கொண்டார். பார்லிமென்ட்டிற்கு வெளியே, நேற்று நிருபர்களிடம் பேசிய மாயாவதி, ""இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில், அரசுக்கு நிஜமான அக்கறை கிடையாது,'' என, கவலை தெரிவித்தார்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


Wednesday 29 August 2012

லோக்சபாவில் எம்.பி.,க்கள், "அட்டென்டென்ஸ்' எப்படி? தம்பிதுரை, அத்வானி முதலிடம்


புதுடில்லி: தற்போதைய, 15வது லோக்சபாவின், மூன்றாவது ஆண்டில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆகியோர் மிகக் குறைவான நாட்களே சபைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, தற்போதைய, 15வது லோக்சபாவின் மூன்றாவது ஆண்டில் (2011 மே முதல் 2012 வரை), எம்.பி.,க்களின் வருகை குறித்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2011 மே முதல் 2012 மே மாதம் வரை நடந்த லோக்சபாவின் மொத்தம், 85 அமர்வுகளில், ராகுல், 24 நாட்கள் மட்டுமே, சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

தற்போதைய உ.பி., முதல்வரும், முன்னர், எம்.பி.,யாக இருந்தவருமான, அகிலேஷ் யாதவ், 31 நாட்கள் கலந்து கொண்டுள்ளார். பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகிய இருவரும், 16 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

"2ஜி' வழக்கில், கைதாகி சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நான்கு நாட்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, 30 நாட்களும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, 25 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சபை நடந்த, 85 நாட்களில், 34 நாட்கள் சபைக்கு வந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், பெரும்பாலான நாட்கள் வரவில்லை. அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களான நிர்மல் கத்தாரி, பி.எல்.புனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆகியோர், லோக்சபா நடந்த, 85 நாட்களிலும் சபைக்கு வந்துள்ளனர். லோக்சபா நடந்த, 85 நாட்களில், 110 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 175 மணி நேரம், 51 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தமட்டில், சோனியா, 2.32 கோடி ரூபாயும், அத்வானி 1.71 கோடி ரூபாயும், சுஷ்மா சுவராஜ் 8.58 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


லோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்தா அறிவிப்பு


கோல்கட்டா: ""லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால், அதை சந்திக்கத் தயார்; அதே நேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழ்வதை, நாங்கள் விரும்பவில்லை,'' என, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உட்பட பல பிரச்னைகள் காரணமாக, லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற ஒரு சூழல் உருவாகியுள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியான, திரிணமுல் காங்., கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியிடம், கோல்கட்டாவில், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அதன் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை, நாங்கள் விரும்பவில்லை. ஒரு வேளை லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் உருவானால், அது ஒரு முக்கியப் பிரச்னை. எப்படி இருந்தாலும், அரசியல் சூழலுக்கு ஏற்ப, தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


*News From http://www.dinamalar.com(29-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Friday 24 August 2012

தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்


மக்களின் பிரச்னைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதியான முறையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக தொண்டர்களுக்கு அதன் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த போராட்டங்கள் குறித்து உரிய தகவல்களை போலீசாருக்கும், நாளேடுகளுக்கும் முன்பே அறிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தொடரும் மின்வெட்டு, காவிரி தண்ணீர் திறந்து விடப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறவழியில் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னைகள் மட்டுமல்லாமல் தீர்வு கிடைக்காத உள்ளூர் பிரச்னைகளுக்காகவும் திமுக உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


நான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டன.



இதனால் இன்று காலை அவை கூடிய சிறிது நேரத்திற்குள்ளாகவே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், தொடர்ந்து நான்காவது நாளாக இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளன. நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக அரசுக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


இணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்


உள்நாட்டு பாதுகாப்போடு இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்தியா உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அறிவுரை கூறியுள்ளது.

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சமீபத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளியேறியது தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் வதந்தி பரப்பிய நபர்களின் முகவரியை முடக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பும், இணைய தள சுதந்திரமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கை என்றும், இந்த விஷத்தில் இந்திய அரசுக்கு முடிந்தளவு உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


ஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., : அரவிந்த கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் பணத்தை சுருட்டுவதற்காக காங்கிரசும், பாரதிய ஜனதாவும் கை கோர்த்து செயல்படுவதாக அரவிந்த கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும், பாஜக தலைவர் நிதின் கட்கரி ஆகியோரின் இல்லத்தை நாளை மறுதினம் முற்றுகையிடப் போவதாக கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நாளை மறுதினம் காலை 10 மணி அளவில் டெல்லி ஜந்தர்மந்தரில் கூடவுள்ளதாகவும் வலைதளத்தில் அவர் எழுதியுள்ளார். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால், அரசுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* News From http://puthiyathalaimurai.tv(24-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Wednesday 8 August 2012

குற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி


புதுடில்லி: அசாம் கலவரம் தொடர்பாக லோக்சபாவில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே எதிர்கட்சிகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது: அசாம் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான நேரம். இந்த கலவரம் எதிர்பாராதது. கலவரம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையான தகவல் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

அகதிகள் குறித்த விபரம் உள்ளதா? அத்வானி கேள்வி: உள்துறை அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அசாமில் இனக்கலவரம், மதக்கலவரமோ ஏற்படவில்லை. அசாமில் இருப்பவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும் இடையே தான் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசிடம் அகதிகள் குறித்த முழு விபரம் உள்ளதா? அசாம் கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது. அரசின் தோல்வி குறித்து உள்துறை அமைச்சரின் விளக்கம் தேவை என கூறினார்.

இதன் பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் அசாம் கலவரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வியடைந்தது.


முன்னதாக அசாம் கலவரம் தொடர்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிஅசாம் மாநிலத்தில் மக்கள் ‌அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.வங்கதேசத்திலிருந்து ‌சட்டவிரோதமாக பலர் ஊடுருவி வருகின்றனர். இவர்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுக்காத இந்த மத்திய அரசு, சட்ட விரோத அரசு என கூறியதையடுத்து, லோக்சபாவில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அத்வானியின் இந்த கருத்திற்கு ‌சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து, அத்வானி தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றார். கடும் அமளி நிலவியதால், லோக்சபா மதியம் 2மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பார்லிமென்ட் மழைக்‌கால கூட்டத்‌தொடர், இன்று இரு அவைகளிலும் பெரும் அமளியுடன் துவங்கியுள்ளது. அசாம் வன்முறை, விலைவாசி உயர்வு, வறட்சி நிலவரம் உட்பட பல பிரச்னைகளை சபையில் எழுப்பி, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதங்களுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பஞ்சமிருக்காது என்ற நிலையில், இன்று காலை பார்லிமென்டின் இரு அவைகளும் துவங்கின.

சுமூக கூட்டத்தொடர் : பிரதமர் நம்பிக்கை : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மன்‌மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்லி., கூட்டத்தொடர் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, மழைக்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும். இக்கூட்டத்‌தொடரை, எதிர்க்கட்சிகள் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும என்றும் அவர் கூறினார்.

அசாம் கலவரம் குறித்து பார்லி.,யில் அறிக்கை - பிரதமர் : இன்று துவங்க உள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, பார்லிமென்ட் கூட்டத்தொடரை, அரசியல் கட்சிகள் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அது பார்லிமென்ட் விதிமுறைகளுக்குட்பட்டே நடைபெறும் என்றும், பார்லிமென்டில் புதிதாக கால்பதித்துள்ள இளம் எம்.பி.க்‌கள் விவாதங்களில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அசாம் கலவரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர பா.ஜ.கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவைகள் ஒத்திவைப்பு : பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு அசாம் கலவரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் கோரினர். இதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டு, கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது. பின், அசாம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மதியம் 12 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.ராஜ்யசபாவில், குருத்வாரா துப்பாக்கிச்சூடு குறித்த விவாதம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனைய‌டுத்து ராஜ்யசபாவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

விவாதத்தை துவக்கினார் அத்வானி : அசாம் கலவரம் குறித்த விவாதம், பார்லிமென்டின் இரு அவைகளிலும் அமளி ஏற்படுத்தியதையடுத்து, நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின் 12 மணிக்கு லோக்சபா மீண்டும் துவங்கியது. அசாம் கலவரம் குறித்த விவாதத்தை, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி துவக்கி வைத்து பேசினார்.

அத்வானி பேச்சு : வங்‌கதேச நாட்டிலிருந்து குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அசாம் கலவரம் குறித்த விவாதத்தில் அத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அசாம் மாநில மக்களே அங்கு அகதியாக வாழ்ந்து வருகின்றனர். வன்மு‌றை குறித்து பதில் அளிக்க ‌வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது என்றும், சட்டத்திற்கு விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு : அசாம் கலவரம் குறித்த அமளி, 12 மணிக்கு பிறகும் ராஜ்யசபாவில் தொடர்ந்து இருந்து வந்ததால், ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*News From http://www.dinamalar.com(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/



நான் பிரதமர் வேட்பாளரா? நிதிஷ்குமார் மறுப்பு


பாட்னா: 2014ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

காங்கிரஸ், பா.ஜனதா, இடதுசாரிகள் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எதிர்வரும் 2014 பார்லிமென்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். பா.ஜ. கட்சியிலும் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பிரதமர் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பா.ஜ. கட்சியில், ஒரு பெரிய யுத்தமே நடந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துத்துவா கொள்கையை கடைபிடிக்கக் கூடிய ஒருவர்தான் நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இதனிடையே மோடி தான் அடுத்த பிரதமர் என்று பா.ஜ. வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மோடியை நிறுத்தாதீங்க...! தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தக் கூடாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடந்த 25-ந் தேதியன்று பாஜக தலைவர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்த போது, இது தொடர்பாக விவாதித்திருக்கிறார். மேலும் மதச்சார்ப்பற்ற ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.,வுக்கு நெருக்கடி: இந்நிலையில் இன்று பிரதமர் வேட்பாளர் குறித்து பேட்டியளித்த நிதிஷ்குமார், கூட்டணி சார்பில் தேர்தலை சந்திக்கும் போது, கூட்டணியை தலைமை தாங்கும் கட்சி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அப்போது தான் வேட்பாளர் குறித்து மக்கள் விவாதித்தும், ஆலோசித்தும் எடை போட முடியும். இது போன்று பல மாநில தேர்தல்களை நான் பார்த்துள்ளேன். கடந்த பார்லிமென்ட் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அத்வானியின் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. பிரதமர் வேட்பாளராக நான் போட்டியிட விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதசார்புடையவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை நான் விரும்பவில்லை. ஒரு வேளை மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகும் என்று கூறினார்.


*News From http://www.dinamalar.com(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Tuesday 7 August 2012

நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு


புதுடில்லி : நாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கை 252 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில், மீண்டும் ஹமீது அன்சாரியே நிறுத்தப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டார். பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை தேர்தலை புறக்கணித்தன.

ஓட்டுபதிவு துவங்கியது: பார்லிமென்ட்டில் லோக்சபா மற்றும் ராஜ்சபா ஆகிய இரு அவைகளிலும் உள்ள மொத்தம் 790 எம்.பி.க்கள் ஒட்டளிக்க தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும் ஓட்டளிக்க ராஜ்யசபாவில் உள்ள அறை எண் 63-ல் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, லோக்சபா சபாநாயகர் மீரா குமார், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் ஒட்டளித்தனர். தொடர்ந்து மற்ற எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. தொடர்ந்து ஓட்டுக்கள் எண்ணும் பணி துவங்கியது. இத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் நியமித்தார்.

யார் யாருக்கு யார் ஆதரவு: ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளான தி.மு.க., சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் ஜஸ்வந்த் சிங்கை பொறுத்தமட்டில் பா.ஜ.வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், அதிமுக., சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர்.

அன்சாரி வெற்றி: மாலை 7 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாயின. இதன்படி, அன்சாரிக்கு 490 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கிற்கு 238 ஓட்டுகளும் கிடைத்தன. 8 ஓட்டுகள் செல்லதா ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, 252 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஹமீது அன்சாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்., திட்டம்


புதுடில்லி: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில், தனித்துப் போட்டியிட திரிணமுல் காங்., திட்டமிட்டுள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான, திரிணமுல் காங்., கடந்த 2009ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதுபோல், 2010ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் இந்நிலை தொடர்ந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு.கூ., வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு, மம்தா பானர்ஜி தன் ஆதரவைத் தர காலம் தாழ்த்தியது, காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் 2014ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என, திரிணமுல் காங்., கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சித் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும், திரிணமுல் காங்., தனித்துப் போட்டியிடும். எல்லா தொகுதிகளிலும் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் நேர்மையாளராகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இத்தகைய குணநலன்களைக் கொண்டவராக எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திகழ்கிறார். இவ்வாறு சுதீப் கூறினார்.

துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி, காங்., தலைவர் சோனியா நேற்று அளித்த மதிய விருந்தில், திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், காங்.,குடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என, திரிணமுல் காங்., கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.


*News From http://www.dinamalar.com(07-Aug-2012)
http://www.makkalsanthai.com/


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More